இங்கு அவ்வப்போது நமது #பேரரசர்கள் #கோயில் கட்டினார்கள் அண்டை நாட்டை படையெடுத்து சென்றார்களே அன்றி #மருத்துவமனை கட்டினார்களா? #கல்வி நிலையங்கள் கட்டினார்களா என்ற கேள்வியுடன் ஆங்கிலேயர் வருகைக்கு பிறகே நாம் முறையான கல்வியும் மருத்துவமும் பெற்றோம் என்ற வாதங்களும் ஆங்காங்கே ஒலிக்கின்றன...!
இதற்கு பதில் கூறுவதாகவே உள்ளது இப்பதிவு

இராஜராஜ சோழன் காலத்தில் அவரது சகோதரி குந்தவை பிராட்டியாரால் இலவச மருத்துவமனை சிறப்பாக செயல்பட்ட செய்தியை பாபநாசம் வட்டம் இராஜகிரிக்கு அருகிலுள்ள கோயில் #தேவராயன்பேட்டை_சிவாலய_சாசனத்தின் மூலம் அறிய முடிகிறது..!
இம்மருத்துவமனைக்கு #சுந்தர_சோழ_விண்ணக_ஆதுலசாலை என்ற பெயர் இருந்ததை அந்த சிவாலய சாசனத்தின் மூலம் அறிய முடிகிறது. குந்தவை தனது தந்தையின் நினைவாக இந்த இலவச மருத்துவமனையை தோற்றுவித்துள்ளார்...!
கிபி 1015ல் எழுதப்பட்ட இந்த சாஸனம் சுந்தர் சோழ விண்ணக ஆதுலசாலைக்கு நிலம் அளிக்கப்பட்ட செய்தியும் இதை குந்தவை பிராட்டியாரால் தோற்றுவிக்கப்பட்டது என்ற செய்தியையும் தருகிறது....!
அடுத்ததாக சாசனம் கிபி 1018 ஆம் ஆண்டான இராஜேந்திர சோழனின் 7ஆம் ஆண்டில் வெட்டப்பட்டதாகும். அதாவது தஞ்சை மருத்துவமனைக்கு "வைத்ய போகமாக" முன்பு அளித்த நன்கொடை போதாதென்று நினைத்த குந்தவை பிராட்டியார் இராஜகேசரி சதுர்வேதி மங்கலத்திடமிருந்த ஒருவரிடமிருந்து விலைக்கு வாங்கி அளித்த தகவலை தருகிறது. இச்செய்தியை கல்வெட்டாக பொறிக்க குந்தவை பிராட்டியாரே ஆணையிட்டதாக அந்த கல்வெட்டு செய்தியே சொல்கிறது.....!
ஆதுலசாலை அல்லது ஆதுரசாலை என்பது நோய்வாய்ப்பட்டோர் சிகிச்சை பெறும் இடமாகும். இங்கு மருந்துகள் அளிப்பதோடு #சல்லியகிரியை எனும் அறுவை சிகிச்சை முறைகளும் இருந்தது குறிப்பிடத்தக்கது. சோழர்காலத்தில் திருமால் கோயில்களில் ஆதுலசாலைகள் இயங்கி வந்த செய்தியை திருமுக்கூடல் எனும் ஊரிலுள்ள வீரராஜேந்திர சோழனின் கல்வெட்டு செய்தி ஊர்ஜிதமாக்குகிறது....!
வீரராஜேந்திரன் கிபி1063 முதல் 1070 வரை சோழ மண்டலத்தை ஆட்சி செய்தவராவார். இவர் #திரிமுக்கூடலில் இருந்த மருத்துவமனைக்கு அளித்த அறக்கட்டளை பற்றி இந்த சாசனம் விளக்குகிறது





அதாவது திரிமுக்கூடல் விஷ்ணு ஆலயத்தில் இருந்த ஜனநாத மண்டபத்தில் ஒரு பள்ளியும் ஒரு ஆதுல சாலையும், மாணவர்கள் தங்குவதற்கு ஒரு விடுதியும் இவ்வறக்கட்டளையால் செயல்பட்டன. இவ்வாறு அம்மண்டபத்தில் செயல்பட்ட மருத்துவமனைக்கு #வீரசோழ_ஆதுலசாலை என்ற பெயர் இருந்ததை இந்த சாசனம் பதிவு செய்கிறது....!
இந்த ஆதுலசாலையில் அறுவை சிகிச்சை மற்றும் நோயாளிகள் தங்கி சிகிட்சை பெற 15 படுக்கை அறை வசதிகளும் இருந்தன. இங்கு இன்று இருப்பதுபோல் பெண் செவிலியர்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது...!
இந்த மருத்துவமனையில் இருந்த மருந்துகள் பற்றியும் அம்மருந்துகளின் பெயர்கள் மற்றும் அளவு பற்றியும் இச்சாசனம் தெளிவாக கூறுகிறது...!
1. பிராம்யம் கடும்பூரி (1 படி)
2. வாசாஹரிதகி ( 2படி)
3. கோமூத்ர ஹரிதஹி (2படி)
4. தசமூலா ஹரிதஹி (1படி)
5. கந்தீரம் (1 படி)
6. பால கோரண்ட தைலம் (1தூணி)
7. பஞ்சாக தைலம் (1தூணி)
8. ஸாஸுணாதி ஏரண்ட தைலம் (1தூணி)
இப்படி 19 வகையான மருந்துகளின் பெயர்களும் #புராணசர்பி தயார் செய்ய பசுநெய்யும் அங்கு இரவு முழுவதும் விளக்கு எரிய எண்ணெய் இருந்த செய்தியும் காணப்படுகிறது....!
இதன்மூலம் வீரராஜேந்திரனால் நடத்தப்பட்ட திரிமுக்கூடல் மருத்துவமனையைப்போலவே குந்தவை பிராட்டியார் நடத்திய விண்ணக ஆதுல சாலையும் சிறப்பாக செயல்பட்டதை அறிய முடிகிறது....!
பாண்டிய மன்னர்கள், சோழ மன்னர்கள் காலத்தில் இருந்த கல்வி நிலைமைகளைக் கல்வெட்டுக்களால் அறிய முடிகிறது. மடங்கள், கோவில்கள், சத்திரங்கள் ஆகிய இடங்களில் கல்வி நிலையங்கள் அமைந்திருந்தன....!
மன்னர்களும், மக்களும், கிராமசபைகளும், கோவில் நிர்வாகங்களும் கல்வி நிலையங்கள் செயல்படத் தானங்களும், மானியங்களும், நன்கொடைகளும் அளித்தன....!
கற்றவர்களும், கல்வியாளர்களும், ஆசிரியர்களும் பெரிதும் மதிக்கப்பட்டனர். பொதுகல்வி, மருத்துவம், ஜோதிடம், கணிதம், வானவியல், வேதகல்வி ஆகியன கற்றுக் கொடுக்கப்பட்டன. கல்வி நிலையங்களில் மாணவர்களும், ஆசிரியர்களும் தங்கி இருக்க விடுதிகளும் இருந்தன. விடுதிகளில் தங்கி இருப்போருக்கு இலவசமாகத் தங்கும் இடங்களும், உணவும், உடையும், பிற தேவைகளும் வழங்கப்பட்டன....!
#எண்ணாயிரம் என்ற ஊரில் உள்ள கல்வெட்டு ரிக் வேதம், அதர்வண வேதம், பிரபாகரம், வேதாந்தம் ஆகியன கற்றுக் கொடுக்கப்பட்ட செய்தியைக் கூறுகிறது. 300 மாணவர்கள் இங்கு தங்கியிருந்து கற்றதாகக் கூறப்படுகிறது. ராஜராஜ சதுர்வேதி மங்கலத்துக் கிராமசபை 45 வேலி நிலத்தை இக்கல்வி நிலையத்துக்கு வழங்கியது. இந்நிலத்தில் பயிரிட்டு கிடைக்கும் வருமானம் விடுதி மாணவர் உணவுக்காகவும், உடைக்காகவும் செலவு செய்யப்பட்டன. ராஜாதிராஜன் காலத்தில் திரிபுவனி என்ற ஊரில் இருந்த கல்வி நிலையத்துக்கு 72 வேலி நிலம் வழங்கப்பட்டது. 260 மாணவர்களும், 13 ஆசிரியர்களும் இங்கு இருந்தனர். மாணவர்களும், ஆசிரியர்களும் அரசு வாரியங்களில் பணி செய்யக்கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.....!
வீரராஜேந்திரன் காலத்தில் திருமுக்கூடல் என்ற ஊரில் வைஷ்ணவ மாதவன் என்பவன் கல்வி நிலையம் நிறுவியதாக அவ்வூர்க் கல்வெட்டு தெரிவிக்கிறது. இரண்டாம் ஆதித்த சோழன் காலத்தில் கும்பகோணத்தில் இருந்த கல்வி நிலையத்தில் பிரபாகரம் வேதங்கள் கற்பிக்கப்பட்டன. காஞ்சீபுரத்தில் இருந்த சமணர்களின் கடிகையில் கதம்ப அரசனான மயூரசன்மன் வேதம் கற்றதாகத் தாளகுண்டா என்ற இடத்தில் உள்ள கல்வெட்டு கூறுகிறது....!
திருப்பாதிரிப்புலியூர், திருக்கழுக்குன்றம் ஆகிய ஊர்களில் சமணர் கல்வி நிலையங்கள் இருந்தன. இரண்டாம் நந்திவர்மன் என்ற பல்லவ மன்னன் சோளிங்கர் என்ற ஊரில் வேதங்கள் கற்பித்த சோமாஜி என்ற அந்தணருக்கு வேதவீரமங்கலம் என்ற சிற்றூரைத் தானம் கொடுத்தான். ஞானகாண்டம், இதிகாசம் ஆகியன கற்றுக்கொடுக்கப்பட்டதாகக் காசக்குடிச் செப்புப்பட்டயம் கூறுகிறது....!
விக்கிரம சோழன் கல்வெட்டு திருவாடுதுறையில் மருத்துவசாலையும், மருத்துவக் கல்லூரியும் இருந்ததாகக் கூறுகிறது. பசுநெய், மூலிகைகள் மூலம் மருந்துகள் தயாரிக்கப்பட்ட செய்தியும் கூறப்படுகிறது. வீரசோழன் காலத்தில் மருத்துவசாலையில் சிறப்பான மருத்துவர்களும், தாதியர்களும் இருந்ததாகத் தெரிகிறது....!
ஒரத்தநாடு முத்தாலம்மாள்புரம் கல்வெட்டு, மராத்திய மன்னர் காலத்தில் மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், விடுதி மாணவர்களுக்கும் தினசரி வழங்கப்பட்ட பொருட்களின் பட்டியலைத் தெளிவாகக் குறிப்பிடுகிறது. மருத்துவ நூல்கள், நூல் நிலையங்கள் பற்றியும் கல்வெட்டு கூறுகிறது. இலவச கல்வியே அளிக்கப்பட்டது....!
திருவாவடுதுறை மருத்துவக்கல்லூரியில் அஷ்டாங்க ஹிருதயம் என்ற மருத்துவ நூல் கற்பிக்கப்பட்டது. ஸ்ரீரங்கம் கோவிலில் நூல் நிலையம் இருந்தது. நீலகண்ட நாகம் என்பவர் ஸ்ரீரங்கம் கோவிலில் நூல் நிலையம் அமைத்தவர். முதலாம் ராஜேந்திரன் காலத்தில் ராஜராஜ சதுர்வேதிமங்கலம் மருத்துவக் கல்விச்சாலையில் 270 இளங்கலை மாணவர்களும், 70 முதுகலை மாணவர்களும் இருந்தனர். மாணவர்களில் 40 பேர் பிரம்மச்சாரிகள். நான்கு வேதங்கள், பிரபாகரம், வியாகரணம், பீமாம்சம் போன்றவையும் கற்பிக்கப்பட்டன. ஆசிரியர்கள் மரியாதையுடன் நடத்தப்பட்டனர். வாத்தி என்று ஆசிரியர்கள் அழைக்கப்பட்டனர். நித்த வினோதப் பேரரையார் என்பன போன்ற பட்டங்கள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டன.....!
மூன்றாம் ராஜராஜசோழன் காலத்தில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழ நாட்டின் மீது படையெடுத்து நாடு, நகரங்களை அழித்தான். ஆயினும், பட்டினப்பாலை என்ற நூலைப் பாடியதற்காகப் புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்பவருக்குக் கரிகால் சோழன் கொடுத்திருந்த மண்டபத்தை மட்டும் இடிக்கவில்லை. புலவர்கள் பெற்ற மதிப்பை இது காட்டுகிறது. இச்செய்தி சுந்தரபாண்டியன் கல்வெட்டுகளால் தெரிய வருகிறது.....!
திருவாச்சூர் வியாகரண மண்டபத்தில் இருந்த கல்லூரியில் பாணினி எழுதிய இலக்கண நூல் கற்பிக்கப்பட்டது. நெல்லூரை ஆண்ட சிற்றரசன் ஒருவர் குலோத்துங்க காவனூர் என்ற ஊரை திருவாச்சூர் கல்வி நிலையத்திற்குத் தானமாக வழங்கினான். திருபதுங்கன் என்னும் பல்லவ மன்னன் காலத்தில் இசைக்கலை கற்பிக்கப்பட்டதாகப் பாகூர் வடமொழிக் கல்வெட்டு கூறுகிறது....!
படைக்கலப் பயிற்சிக்கென கல்வி நிலையம் இருந்ததையும் அறிகிறோம். தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் சோமநாதர் கோவிலில் உள்ள இரண்டாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கல்வெட்டு ஆத்தூர்ச் சேனாவரையர் மாணவர்களால் தனக்கு வழங்கப்பட்ட நிலத்தைக் கோவிலுக்குத் தானம் வழங்கினார் என்று கூறுகிறது. இம்மன்னர் காலம் கி.பி. 1276. இந்தச் சேனாவரையர் தொல்காப்பியம் சொல்லதிகாரத்திற்கு உரையும் எழுதியுள்ளார். பாண்டியனின் சேனைக்குத் தலைவராகவும் இருந்தார். கடைக்கலப் பயிற்சியும், இலக்கியக் கல்வியும் கற்பித்துள்ளார். இவரது உரையில் தென்பாண்டி நாட்டு பழக்க வழக்கங்கள், பேச்சு வழக்குகள் ஆகியன எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளமை எண்ணத்தக்கது. சேனைக்குத் தலைவர் என்பதால் சேனாவரையர் என்று பட்டம் பெற்றார். இக்கல்வெட்டு ஆத்தூரைச் சேந்தமங்கலம், சேர்ந்தபூமங்கலம், அவனிபசேரமங்கலம் என்றெல்லாம் குறிப்பிடுகிறது. சேனாவரையர் செல்வந்தர், நல்லவர், வல்லவர் என்று மயிலைநாதர் உரை குறிப்பிடுகிறது.....!
வேதக்கல்வியும், வேள்வியும் பாண்டியர் காலத்தில் போற்றப்பட்டது. கொற்கை நற்கொற்றன் என்பவனுக்குப் பாகனூர்க் கூற்றம் என்னும் இடத்தில் வேதத்தில் வல்ல அந்தணர்களைக் கொண்டு வேள்வி செய்து அந்த இடத்தை வேள்விக்குடி என்று பெயரிட்டு நற்கொற்றனுக்குப் பாண்டிய மன்னன் வழங்கினான். இச்செய்தி வேள்விக்குடிச் செப்பேட்டில் காணப்படுகிறது. வேள்விக்குடிச் செப்பேடு கவிதை நடையில் அமைந்துள்ளது. கல்வெட்டுகளில் உள்ள மெய்க்கீர்த்தி என்னும் பகுதி கவிதை நடையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கல்வியிலும், புலமையிலும் சிறந்தவர்களே கல்வெட்டுகளை எழுதியுள்ளனர். மன்னர்கள் காலத்தில் கல்வி நிலை சிறப்பாக இருந்தது கல்வெட்டுகளால் உறுதி செய்யப்படு கின்றன....!
(கல்விநிலையங்கள் பற்றிய தகவலை தந்தவர் - முனைவர் அ.பாஸ்கரபால்பாண்டியன், முன்னாள் கல்வெட்டு ஆய்வாளர், திருச்செந்தூர்)
(இரண்டிற்கு கல்வெட்டு ஆதாரங்களை தந்து உதவியது தொல்லியல் ஆய்வாளர் திரு #மாரிராஜன் அவர்கள்)
ஆக திராவிட ஆட்சியில் தான் நமக்கு கல்வி கிடைத்து என்றும் ஆங்கிலேயருக்கு முன்பு முறையான கல்வியும் மருத்துவமும் கிடைக்கவில்லை என்று அவரவர் #லாபிகளை திணிக்க முற்படுபவர்களிடமிருந்து சற்று தள்ளியே இருங்கள்.....!
No comments:
Post a Comment