கிமு கிபி எப்போது வந்தது? எப்போது போனது? அதற்கு முன்பு இருந்த ரோமு ரோபி என்றால் என்ன? காலண்டரின் கதையைத் தெரிந்து கொள்வோம்!
-----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------
1) மத பீடங்களின் ஆதிக்கத்தில் இருந்த காலண்டர் (காலக் கணக்கு) தற்போது முற்றிலுமாக அறிவியலின் பிடிக்குள் வந்து விட்டது.
2) உலக அளவில் இன்று நாம் பயன்படுத்தும் காலண்டர் உண்மையில் ஜூலியஸ் சீசர் திருத்தி வடிவமைத்த காலண்டரே. அ) 12 மாதங்கள் ஆ) 365 நாட்கள் இ) 4 ஆண்டுக்கு ஒரு முறை லீப் ஆண்டு, அதாவது பிப்ரவரியில் 29 நாட்கள் ஆகிய அனைத்து அம்சங்களுமே கிமு 46ல் சீசரால் அறிமுகம் செய்யப்பட்டு, அடுத்த ஆண்டு முதல், அதாவது,கிமு 45 முதல் செயல்பாட்டுக்கு வந்து விட்டன.
3) ஜூலியன் காலண்டர் செயல்பாட்டுக்கு வந்தபோது, இயேசு கிறிஸ்து பிறந்திருக்கவே இல்லை என்பது கருதத் தக்கது.
4) அப்படியானால், ஜூலியன் காலண்டரில் ஆண்டுகளைக் கணக்கிட எந்தக் குறிப்பைப்
பயன்படுத்தினர் (what was the REFERENCE point then?)
5) அப்போது பயன்படுத்திய reference point ரோம் நகரம் உருவான தேதி ஆகும். அதாவது ரோ.மு, ரோ.பி என்ற கணக்கிடும் முறை இருந்தது. எனினும் இம்முறை பரவலாக மக்களால் பின்பற்றப் படவில்லை.
ரோமானிய வரலாற்று ஆசிரியர்கள் மட்டுமே இதைப் பின்பற்றினர். ரோமு = ரோமாபுரி நகரம் நிறுவுவதற்கு முன்னால், ரோபி = ரோமாபுரி நகரம் நிறுவிய பின்னால்.
6) ரோமு ரோபி என்பன பின்னாளில் கிமு கிபி என்று மாறின. முதலில் கிறிஸ்துவத்தை ஏற்றுக் கொள்ளாமல், இயேசுவைச் சிலுவையில் அறைந்த ரோமாபுரி பின்னர் கான்ஸ்டன்டைன் காலத்தில், கிபி 4ஆம் நூற்றாண்டில், கிறிஸ்துவத்தை ஏற்கத் தொடங்கியது.
7) கிபி 525ல் டயோனிசியஸ் எக்சிகஸ் (Dionysius Exiguus) என்னும் ரோமானியத் துறவி (இவர் ஒரு கணித நிபுணரும்கூட) முதன் முதலில் கிமு, கிபி என்ற கணக்கிடும்முறையை அறிமுகம் செய்தார். என்றாலும் கிபி 800ல்தான் இப்பழக்கம் பரவலானது.
8.. கிபி 1582ல் போப்பாண்டவர் பதின்மூன்றாம் கிரெகோரி ஜூலியன் காலண்டரில் லீப் ஆண்டு குறித்த ஒரு திருத்தத்தைச் செய்தார். ஒவ்வொரு 400 ஆண்டுக் காலத்திலும் மூன்று லீப் ஆண்டுகளின் பெப்ரவரியின் லீப் நாட்களைக் குறைத்தார்.
9) இந்த ஒரே ஒரு திருத்தத்தை மட்டுமே அவர் செய்தார். அவருக்கு முன்பே, ஜூலியஸ் சீசரால் பெருமளவு திருத்தங்கள் செய்யப்பட்டு இன்றைய காலண்டரின் வடிவம் அன்றே கொண்டுவரப் பட்டு விட்டது. என்றாலும் கடைசியாகத் திருத்தம் செய்தவர் என்ற அடிப்படையில் இக்காலண்டர் கிரெகோரி காலண்டர் என்று அழைக்கப் பட்டு வந்தது.
10) கிரெகொரிக்குப் பின்னரும் இக்காலண்டரில் தொடர்ந்து தேவையான பல திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன. 1980களில் கிறிஸ்துவ சகாப்தம் என்ற பெயர் மாற்றப்பட்டு பொது சகாப்தம் என்ற பெயர் சூட்டப்பட்டது.
11) தற்போது காலண்டரில் திருத்தம் செய்யும் அதிகாரம் அறிவியல் அறிஞர்களுக்கு மட்டுமே உள்ளது.1972 முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் விநாடித் திருத்தங்கள் பற்றி (adding leap seconds) அறிந்து கொள்ள வேண்டும்.
.12) ஏசு கிறிஸ்துவின் பெயரில் அமைந்த (கிமு,கிபி)காலண்டருக்கு இஸ்லாமிய சமூகம் பெரிதும் ஆட்சேபம் தெரிவித்து ஏற்க மறுத்தது. தற்போது கிமு, கிபி என்ற சொற்கள் நீக்கப்பட்டதானது இஸ்லாமிய சமூகத்துக்கு நிறைவைத் தந்துள்ளது.
13) ஆக, இன்றைய உலகின் காலண்டர் உலகப் பொதுமையை உறுதி செய்கிறது. மதச்சார்பற்ற துல்லியமான நவீனமான அறிவியல் காலண்டரை மானுடம் அடைந்து விட்டது. இது மானுடத்தின் வெற்றி. இது அறிவியலின் வெற்றி.
புத்தாண்டும் புதிய காலக் கணக்கும்!
பிற்போக்குச் சிந்தனைகளை முறியடிப்போம்!
------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------
1970களில், 1980களில் படிப்பு வேலைவாய்ப்புக்கான
விண்ணப்பப் படிவங்களில், "Date of birth: According to
Christian era" என்று காலம் இருக்கும். அதை நிரப்ப
வேண்டும்.
இன்று கிறிஸ்து சகாப்தம் (Christian era) என்ற பதம்
முற்றிலும் அகற்றப்பட்டு விட்டது. போப்பாண்டவர்
13ஆம் கிரெகொரியால் திருத்தம் செய்யப்பட்டு
அவர் பெயராலேயே கிரெகோரி காலண்டர்
(Gregory calendar) என்று வழக்கப்பட்டு வந்த
காலண்டர் இன்று நடைமுறையில் இல்லை.
இந்த உண்மையை மக்கள் உணர்ந்து கொள்ள
வேண்டும்.
ஆக, ஏசு கிறிஸ்துவின் பெயரால் அமைந்த
காலக் கணித முறை (calendar) முடிவுக்கு வந்து
விட்டது. இன்று அது காலாவதி ஆகிவிட்டது.
அரேபியர்கள், இஸ்லாமியர்கள், யூதர்கள் என்று
பல தரப்பினரும் இயேசுவின் பெயரால் அமைந்த
காலக் கணித முறைக்கு (calendar) கடுமையான
ஆட்சேபம் தெரிவித்ததை ஒட்டி, மதத்தின் பெயரால்
அமைந்த அக்கணித முறை உலக அறிவியலாளர்களால்
முற்றிலுமாகக் கைவிடப்பட்டு விட்டது.
இன்று நடைமுறையிலுள்ள புதிய காலக்கணக்கு முறை!
-------------------------------------------------------------------------
கிறிஸ்து சகாப்தம் (Christian era) போய்விட்டது!
பொது சகாப்தம் (Common era) வந்து விட்டது.
கிமு, கிபி என்ற பதங்கள் செத்தொழிந்து விட்டன.
அவற்றுக்குப் பதிலாக,
பொசமு, பொச ஆகிய பதங்கள் வழக்கிற்கு வந்து விட்டன.
பொசமு = பொது சகாப்தத்துக்கு முன்
பொச = பொது சகாப்தம்
ஆகிய பதங்கள் வழக்கில் வந்து விட்டன. உலகெங்கும்
பள்ளி மாணவர்களின் பாடப்புத்தகங்களில் புதிய
மாற்றங்களை உள்ளடக்கிய புதிய காலக்கணித முறை
இடம் பெற்று விட்டது. உலகெங்கும் உள்ள அரசு
ஆவணங்களில், புதிய சகாப்த முறையிலான
காலக்கணித முறையே கடைப்பிடிக்கப் பட்டு
வருகிறது. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல.
ஆங்கிலத்தில் மாற்றங்கள் வருமாறு:-
-------------------------------------
BCE = Before Common Era
(BC = Before Christ என்பது கைவிடப் படுகிறது).
CE = Common Era.
(AD = Anna Domine என்பது கைவிடப் படுகிறது)
எனவே வாசக நண்பர்களே,
தற்போதைய காலண்டர் (ஜனவரி 1ஐ ஆண்டின்
முதல் நாளாகக் கொண்டு டிசம்பர் 31 வரை உள்ள)
காலண்டர் மதச்சார்பற்ற காலண்டர் ஆகும்.
இதைப் புத்தாக்கம் செய்ததும், பராமரித்ததும் அறிவியலாளர்கள். எந்த ஒரு மதத்தின் தலைவருக்கும்
இந்தப் புத்தாண்ட்டில், இந்தக் காலண்டரில் எந்தவொரு
பங்கும் கிடையாது.காலண்டரில் திருத்தம் செய்யும்
உரிமை அறிவியலாளர்களுக்கு மட்டுமே உண்டு.
இந்தக் காலண்டர் அறிவியல் காலண்டர் ஆகும்.
இந்தக் காலண்டர் மதச்சாற்பற்ற காலண்டர் ஆகும்.
இது ஆங்கில காலண்டரோ ஐரோப்பிய காலண்டரோ
அல்ல. இது உலகம் முழுமைக்கும் பொதுவான
காலண்டர் ஆகும். இதைப் போற்றுவோம்.
---------------------------------------------------------
பின்குறிப்பு:
அறிவியல் ஒளி இதழில் முன்பு நான் எழுதிய
காலண்டரின் கதை என்ற நீண்ட கட்டுரையைப்
படிக்கவும்.
***********************************************
கிரிகோரியன் காலண்டர் எனும் நாள் கணக்கு முறை.
கிரிகோரியன் நாட்காட்டி (Gregorian calendar) என்பது உலக அளவில் மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பயன்படுத்தப்படும் நாட்காட்டியாகும்.மேலும் மேற்கத்திய நாட்காட்டி எனவும் கிறித்துவ நாட்காட்டி எனவும் வழங்கப்பெறுகிறது. இந்த நாட்காட்டியானது சர்வதேச நிறுவனங்களான சர்வதேச தபால் ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்றவற்றினால் அங்கீகரிப்பட்டுள்ளது.
இன்று உலகில் பரவலாகப் பயன்பாட்டில் உள்ள நாட்காட்டியான இது கி. மு 45 -ல் ரோமப் பேரரசர் ஜூலியஸ் சீசரால் உருவாக்கப்பட்ட ஜூலியின் நாட்காட்டியின் (Julian calendar) ஒரு திருத்தப்பட்ட வடிவமாகும். இத்தாலியரான அலோயிசியஸ் லிலியஸ் (Aloysius Lilius) என்ற மருத்துவரால் முன்வைக்கப்பட்டது. பிப்ரவரி 24 1582 ல் அப்போதைய திருத்தந்தையான பதின்மூன்றாம் கிரிகோரியின் ஆணைப்படி துவக்கி வைக்கப்பட்டது. இதன் காரணமாகப் பின்னாளில் இந்நாட்காட்டிக்கு "கிரகோரியன் நாட்காட்டி" என்னும் பெயர் வந்தது.
இந்த நாட்காட்டியின் படி இயேசு பிறந்ததாகக் கணிக்கப்பட்ட ஆண்டிலிருந்து ஆண்டுகள் இலக்கமிடப்பட்டன. மேலும் இக்காலப்பகுதி "ஆண்டவரின் ஆண்டு" எனவும் பெயரிடப்பட்டது. இது கிபி 6 வது நூற்றாண்டில் டயனீசியஸ் எக்சீகுவஸ் (Dionysius Exiguus) என்னும் கிறித்தவத் துறவியால் உரோமையில் துவக்கப்பட்ட ஆண்டுக் கணிப்பு முறையாகும்.
கிரிகோரியன் நாட்காட்டி பயன்படுத்தும் முன்னர் இருந்த ரோமானிய நாட்காட்டியில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச்சு, ஏப்ரல், மே, ஜூன், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் எனப் பத்து மாதங்கள் கொண்டதே ஒரு ஆண்டாகும். பின்னரே ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்கள் சேர்க்கப்பட்டன. கிரிகோரியின் நாட்காட்டியானது 'ஜூலியன் நாட்காட்டியின்' சராசரி ஆண்டைவிட நீளமாகக் காணப்பட்டமையால் இளவேனிற் சம இரவு பகல் நாள், நாட்காட்டியில் பின்னோக்கி நகர்வதைத் திருத்துவதற்காக முன்கொணரப்பட்டது.
அதாவது கிபி.1752 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் சுமார் 10 நாட்கள் கிரிகோரியன் நாட்காட்டியில் இருந்து கழிக்கப் பட்டது.மேலும் உயிர்த்த ஞாயிறு நாளைக் கணக்கிட பயன்பட்ட சந்திர நாட்காட்டியும் பல குறைகளைக் கொண்டிருந்ததும் இன்னொரு முக்கிய காரணமாகும்.
ஸ்பெயின், போர்ச்சுக்கல், போலிஷ் லிதுவேனியன் காமன்வெல்த், இத்தாலியின் பெரும்பகுதிகள் போன்றவையே கிரிகோரியன் நாட்காட்டியை முதலில் ஏற்றுக் கொண்டன. 1582 அக்டோபர் முதல் இவை கிரிகோரியன் நாட்காட்டியைப் பயன்படுத்தத் தொடங்கின. இங்கிலாந்தும் அமெரிக்காவும் 1752 ஆம் ஆண்டிற்குப் பிறகே கிரிகோரியன் நாட்காட்டியை அங்கீகரித்தன.
ஆங்கிலேய ஆட்சி காலத்தில் இந்தியாவிலும் இந்த நாட்காட்டி புழக்கத்திற்கு வந்தது. கிரிகோரியன் நாட்காட்டியைக் கடைசியாக ஏற்றுக் கொண்ட நாடுகளில் கடைசியாக வருவது கிரீஸ் ஆகும். 1923 பிப்ரவரி 15 -ல் தான் இந்நாடு கிரிகோரியன் நாட்காட்டியை அங்கீகரித்தது.
சூரிய நாட்காட்டி வகையைச் சார்ந்தது கிரிகோரியன் நாட்காட்டியாகும். ஒரு வழக்கமான கிரிகோரியன் ஆண்டு என்பது முன்நூற்று அறுபத்து ஐந்து (365) நாட்களையும், ஒரு லீப்(நெட்டாண்டு) ஆண்டினையும் உடையதாகும். லீப் ஆண்டு என்பது வழக்கமான கிரிகோரியன் ஆண்டு நாட்களுடன், பிப்ரவரி 29 என்ற நாளையும் இணைத்து முன்நூற்று அறுபத்து ஆறு (366) உடையதாகும். பொதுவாக லீப் ஆண்டு நான்கு கிரிகோரியன் ஆண்டுக்கொருமுறை ஏற்படுகிறது. ஜூலியன் நாட்காட்டி படி இல்லாமல் நானூறு (400) ஆண்டுகளுக்கு மூன்று (3) லீப் வருடங்களைக் கிரிகோரியன் நாட்காட்டி தவிர்த்துவிடுகிறது.
பொதுவாகப் பூமி ஒரு முறை சூரியனை சுற்றிவர 365 நாள் 5 மணி, 48 நிமிடம், 46 வினாடி காலத்தினை எடுத்துக் கொள்கிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்தக் காலத்தினை ஒருநாள் என்று வைத்துக் கணக்கிட இருக்கும் சிரமத்தினை எண்ணி, ஒரு ஆண்டினை 365 நாட்கள் என்ற முழு எண்ணாகக் கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மீதமிருக்கும் 5 மணி, 48 நிமிடம், 46 வினாடிகளைத் தவர்க்க இயலாது என்பதால் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை சிறப்பு நாளாகப் பிப்ரவரி 29 என்ற நாளையும் இணைத்துக் கிரிகோரியன் நாட்காட்டில் கணக்கிடப்படுகிறது.
இவ்வாறு ஆண்டிற்கொருமுறை ஒரு நாளை (பிப்ரவரி 29) நாளை இணைக்கையில் 100 ஆண்டுகளில் 18 மணி 43 வினாடி காலம் அதிகமாக இணைக்கப்படுகிறது. எனவேதான் நூறு வருடங்களுக்கு ஒரு முறை லீப் வருடம் (நெட்டாண்டு) கணக்கில் கொள்ளப்படுவதில்லை. இவ்வாறான பல சீர்த்திருத்தங்களை கொண்ட கிரிகோரியன் நாட்காட்டியானது,மேலும் தீர்வில்லாத சிக்கல்களை கொண்டிருப்பதால் இந்த நாட்காட்டியானது சரியானது இல்லை என்ற கருத்தும் அறிஞர்களிடையே உள்ளது.
கிறிஸ்தவர்கள் பொதுவாக இயேசுவின் பிறந்த நாளென்று டிசம்பர் 25 ஆம் நாளைக் குறித்துக் கொண்டாலும், இயேசு உயிர்த்தெழுந்த நாளைக் கணக்கிட கிரிகோரியன் நாட்காட்டியை அடிப்படையாகப் பயன்படுத்துகிறார்கள். இதனால் ஈஸ்டர் எனப்படும் இயேசு உயிர்த்தெழுந்த நாள் ஆண்டுதோறும் வேறுவேறு நாட்களில் வருகிறது. இதற்குச் சூரியன் மற்றும் சந்திரனின் இயக்கத்தினையும் கணக்கில்கொள்வதே காரணமாகிறது.
ஜூலியஸ் சீசரினால் அறிமுகம் செய்யப்பட்ட நாட்காட்டியானது அவருடையப் பெயரிலேயே ஜூலியன் நாட்காட்டி என்று அறியப்பெறுகிறது. இது கிமு 46ல் அறிமுகம் செய்யப்பெற்றது. இது உரோமில் பயன்பாட்டில் இருந்த நாட்காட்டி முறையில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாக வானியல் அறிஞர் அலெக்சாந்திரியாவின் சொசிசெனசு என்பவரின் கருத்துக்கேற்ப சராசரி வெப்ப வலய சூரிய ஆண்டுக்கு அமைய அமைக்கப்பட்டது. அது 12 மாதங்களையும் 365 நாட்களையும் கொண்ட சாதாரண ஆண்டையும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிப்ரவரியில் மேலதிக ஒரு நாளைக் கொண்ட நெட்டாண்டையும் கொண்டிருந்தது. ஆகவே யூலியன் சராசரி ஆண்டு 365.25 நாட்களாகும்.
கி.மு-கி.பி என வரையறை செய்த முறைக்கு அனோ டொமினி என்று பெயர்.
இந்த கி.மு-கி.பி வரையறையை உருவாக்கியவர் இந்தப் படத்தில் உள்ளவர் தான்.ரோம் நகரைச் சேர்ந்த டயோசினியஸ் எக்ஸிகஸ் இவரது பெயர்.
கிபி 525 ல் இந்த முறையை உருவாக்கினார்.
சனவரி mēnsis Iānuārius என்ற லத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். தொடக்கத்திற்குரிய ஜனுஸ் என்ற ரோமானியக் கடவுளின் மாதம்.
பிப்ரவரி (பொதுவாக 28 நாட்கள் நெட்டாண்டில் (leap year) 29 நாட்கள்), mēnsis Februāriusஎன்ற லத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். பெப்ருவா மாதம்.
ரோமானியத் தூய்மைத் திருவிழா.
மார்ச் mēnsis Mārtius என்ற லத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். "செவ்வாய் கோள் மாதம். ரோமானிய போர்க்கடவுளைக் குறிக்கும் மாதம்.
ஏப்ரல் mēnsis Aprīlisஎன்ற லத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். உறுதியில்லா பொருள் , ஏப்ரோடைட் என்ற ரோமானியக் கடவுள் பெயரை குறிக்கும் மாதம்.
மே mēnsis Māius என்ற லத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். "விவசாயத்துக்குரிய பெண் கடவுளான மயாவின் மாதம்.
சூன் mēnsis Iūnius என்ற லத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். "ஜூனோ மாதம்.திருமணம், குழந்தை பிறத்தல், மற்றும் ஆட்சி செய்தலுக்கான ரோமானிய பெண் கடவுள்.
சூலை mēnsis Iūlius என்ற லத்தீன் மொழியிலிருந்து, "ஜூலியஸ் சீசரின் மாதம்", ஜூலியஸ் சீசர் பிறந்த மாதம்.
ஆகத்து mēnsis Augustus என்ற லத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். "அகஸ்தஸ் மாதம்.
செப்டம்பர் mēnsis september என்ற லத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். கி.மு. 153 ஆம் ஆண்டுக்கு முன் ரோமானிய நாட்காட்டியில் ஏழாவது மாதம்
அக்டோபர் mēnsis octōber என்ற லத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். கி.மு. 153 ஆம் ஆண்டுக்கு முன் ரோமானிய நாட்காட்டியில் எட்டாவது மாதம்.
நவம்பர் mēnsis november என்ற லத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். கி.மு. 153 ஆம் ஆண்டுக்கு முன் ரோமானிய நாட்காட்டியில் ஒன்பதாவது மாதம்.
திசம்பர் mēnsis december என்ற லத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். கி.மு. 153 ஆம் ஆண்டுக்கு முன் ரோமானிய நாட்காட்டியில் பத்தாவது மாதம்.
உலகம் முழுமையும் ஒரே ஆண்டை ஏற்றுக் கொண்டாயிற்று. இப்போது அதைக் கொண்டாடாதே என்று ஒரு கூட்டம் இங்கு கிளம்பியுள்ளது. எதைக் கொண்டாடுவது என்பது அவரவர் உரிமை. கிரிகோரியன் என்பது ஐரோப்பியத் திமிர் என்றால் இங்கு எழும் குரலும் அதற்கு இணையான வேறொரு திமிர். ஒரு நாளைக் கடத்துவது என்பதை தாண்டி இதில் ஆரவாரம் செய்ய ஏதுமில்லை.
தமிழருக்கு சித்திரை மாதமே புத்தாண்டு.
யுகாதி,கொல்லம்,ஹிஜிரி என்று அவரவருக்கும் ஆண்டுகள் உண்டு.
No comments:
Post a Comment