
சிறப்புப்பாயிரத்துக்குப் பொதுவிதி
47 ஆக்கியோன் பெயரே வழியே யெல்லை
நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே
கேட்போர் பயனோ டாயெண் பொருளும்
வாய்ப்பக் காட்டல் பாயிரத் தியல்பே.
ஆகிய வென்பது ஆய் என்று ஆயிற்று .
48 *காலங் களனே காரண மென்றிம்
மூவகை யேற்றி மொழிநரு முளரே.
காலம் - நூல் செய்த காலமும் , களன் - நூல் அரங்கேற்றிய சபையும் , காரணம் - நூல் செய்தற்குக் காரணமும் , என்று இம் மூவகை ஏற்றி மொழிநரும் உளர் - என்று இம் மூன்றனையும் அவ் எட்டனோடு கூட்டிப் பதினொன்றாகச் சொல்லுவாரும் சிலர் உளர் .
(அ.கு) *இறையனார் அகப்பொருள் உரை மேற்கோள் .
நூல் பெயருக்குச் சிறப்புவிதி
49 முதனூல் கருத்த னளவு மிகுதி
பொருள்செய் வித்தோன் றன்மைமுத னிமித்தினும்
இடுகுறி யானுநூற் கெய்தும் பெயரே.
நூற்கு - ஒரு நூலுக்கு , முதல்நூல் - அந் நூலின் முதல் நூலும் , கருத்தன் - அந்நூல் செய்தவனும் , அளவு- அந் நூலின் அளவும் , மிகுதி - அந்நூலிலே சொல்லப்படுவனவற்றுள் மிகுதியாகிய கூறும் , பொருள் - அந் நூலிலே சொல்லப்பட்ட பொருளும் , செய்வித்தோன் - அந்நூல் செய்வோனுக்குப் பொருளுதவி செய்து அதனைச் செய்வித்தவனும் , தன்மை - அந்நூலின் குணமும் , முதல் நிமித்தினும் - முதலாகிய காரணங்களாலும் , இடுகுறியானும் - இடுகுறியானும் ; பெயர் எய்தும் - பெயர் வரும்.
முதல் நூலால் பெயர் பெற்றன பாரதம் முதலாயின . கருத்தனால் பெயர் பெற்றன தொல்காப்பியம் முதலாயின . அளவினால் பெயர் பெற்றன நாலடி நானூறு முதலாயின . மிகுதியால் பெயர் பெற்றன களவியல் முதலாயின . பொருளால் பெயர் பெற்றன அகப்பொருள் முதலாயின . செய்வித்தோனால் பெயர் பெற்றன சாதவாகனம் முதலாயின . தன்மையால் பெயர் பெற்றன நன்னூல் முதலாயின . இடுகுறியால் பெயர் பெற்றன கலைக்கோட்டுத் தண்டு முதலாயின .
வழியின் வகையாகிய நூல் யாப்புக்குச் சிறப்பு விதி
பெனத்தகு நூல்யாப் பீரிரண் டென்ப.
தொகுத்தல் - விரிந்து கிடந்ததைத் தொகுத்துச் செய்தலும் , விரித்தல் - தொக்குக் கிடந்ததைத் விரித்துச் செய்தலும் , தொகை விரி - தொகுத்தும் விரித்தும் செய்தலும் , மொழி பெயர்ப்பு - ஒரு பாடையில் உள்ள நூலை மற்றொரு பாடையிலே திருப்பிச் செய்தலும் , என - என்று , தகுநூல் யாப்பு ஈரிரண்டு என்ப - தக்க நூல் யாப்பானது நால்வகைப்படும் என்று சொல்லுவர் புலவர் .
மலர்தலை என்னும் சூத்திரத்து உள்ளே தொகை வகை விரி யாப் பென்று சொல்லியது இந் நான்கு பிரிவினுள் இல்லையே யெனின் , நடு நின்றவகை பின் நின்ற விரியைக் குறிக்கும்போது தொகையாகவும், முன் நின்ற தொகையைக் குறிக்கும்போது விரியாகவும் நிற்றலினாலே , தொகை வகை விரி என்றது தொகை விரி என்பதனுள் அடங்கும் எனக் கொள்க.
சிறப்புப்பாயிரம் செய்தற்கு உரியார் இவர் என்பது
51 தன்னா சிரியன் றன்னொடு கற்றோன்
தன்மா ணாக்கன் றகுமுரை காரனென்
றின்னோர் பாயிர மியம்புதல் கடனே.
தன் ஆசிரியன் - தன்னுடைய ஆசிரியனும் , தன்னொடு கற்றோன் - தன்னோடு பாடம் கேட்டவனும் , தன் மாணாக்கன் - தன்னுடைய மாணாக்கனும் , தகும் உரைகாரன் - தன் நூலுக்குத் தகும் உரையைச் செய்தவனும் , என்று இன்னோர் - என்று சொல்லப்பட்ட இந் நால்வருள் ஒருவர் , பாயிரம் இயம்புதல் கடன் - சிறப்புப் பாயிரத்தைச் சொல்லுதல் முறைமையாகும்.
தன்னொடு கற்றோன் எனினும் , ஒரு சாலை மாணாக்கன் எனினும் ஒக்கும் .
சிறப்புப் பாயிரம் பிறர் செய்தற்குக் காரணம்
52 *தோன்றா தோற்றித் துறைபல முடிப்பினும்
தான்றற் புகழ்தல் தகுதி யன்றே.
தோன்றா தோற்றித் துறை பல முடிப்பினும் - தோன்றாத நுட்பங்கள் எல்லாம் காட்டிப் பல துறைப்பட்டு விரிந்த நூலைச் செய்து முடித்தாலும் , தான் தன்புகழ்தல் தகுதி அன்று - தானே தன்னைப் புகழ்ந்து கொள்ளுதல் தகுதி அன்றாம் .
அ.கு * தொல்காப்பியம் இளம்பூரணர் உரை மேற்கோள் .
தற்புகழ்ச்சி குற்றம் ஆகா இடங்கள்
53 மன்னுடை மன்றத் தோலைத் தூக்கினுந்
தன்னுடை யாற்ற லுணரா ரிடையினும்
மன்னிய அவையிடை வெல்லுறு பொழுதினுந்
தன்னை மறுதலை பழித்த காலையுந்
தன்னைப் புகழ்தலுந் தகும்புல வோற்கே.
மன்னுடை மன்றத்து ஓலைத் தூக்கினும் - அரசனது சபைக்கு எழுதுஞ் சீட்டுக் கவியிலும் , தன்னுடைய ஆற்றல் உணரார் இடையினும் - தனது கல்வி வலிமையை அறியாதாரிடத்திலும் , மன்னிய அவையிடை வெல்லுறு பொழுதினும் - பெரிய சபையில் வாதஞ் செய்து வெல்லும் பொழுதும் , தன்னை மறுதலை பழித்த காலையும் - தன்னை எதிரி பழித்த காலத்திலும் , தன்னைப் புகழ்தலும் புலவோற்குத் தகும் - தன்னைத் தான் புகழ்ந்து கொள்ளலும் புலவனுக்குத் தகும் .
பாயிரம் நூலுக்கு இன்றி அமையாச் சிறப்பினது என்பது
54 ஆயிர முகத்தா னகன்ற தாயினும்
பாயிர மில்லது பனுவ லன்றே.
ஆயிரம் முகத்தான் அகன்றது ஆயினும் - ஆயிரம் உறுப்புக்களால் விரிந்தது ஆயினும் , பாயிரம் இல்லது பனுவல் அன்று - பாயிரம் இல்லாதது நூல் அன்றாம்.
பாயிரம் நூலுக்கு இன்றி அமையாச் சிறப்பினது என்பது
55 மாடக்குச் சித்திரமு மாநகர்க்குக் கோபுரமும்
ஆடமைத்தோ ணல்லார்க் கணியும்போல் - நாடிமுன்
ஐதுரையா நின்ற வணிந்துரையை யெந்நூற்கும்
பெய்துரையா வைத்தார் பெரிது.
மாடக்குச் சித்திரமும் - மாளிகைக்குச் சித்திரமும் , மாநகர்க்குக் கோபுரமும் - பெரிய பட்டணத்திற்குக் கோபுரமும் , ஆடு அமைத்தோள் நல்லார்க்கு அணியும் போல் நாடி - நடிக்கின்ற மூங்கில் போலும் தோள்களையுடைய மங்கையருக்கு ஆபரணமும் போல நினைத்து , ஐது உரையா நின்ற அணிந்துரையை உரையா - அழகிய பொருளைச் சொல்லுகின்ற பாயிரத்தையுரைத்து; எந்நூற்கும் முன்பெரிது பெய்து வைத்தார் - எவ் வகைப் பட்ட பெரிய நூலுக்கும் முதலிலே பெரும்பாலும் சேர்த்து வைத்தார் ஆசிரியர்.
சிறப்புப்பாயிரத்து இலக்கணம் முற்றிற்று .