புறநானூறு- 335
"வாகை; திணை பாடியது:மாங்குடி கிழார் துறை மூதில் முல்லை.
அடலருந் துப்பின் .. .. .. ..
குரவே தளவே குருந்தே முல்லையென்று
இந்நான் கல்லது பூவும் இல்லை;
கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே
சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையொடு
இந்நான் கல்லது உணாவும் இல்லை;
துடியன் பாணன் பறையன் கடம்பனென்று
இந்நான் கல்லது குடியும் இல்லை;
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.
(புறநானூறு 335; மாங்குடி கிழார்)
மாங்குடி கிழார் இயற்றிய இப்பாடல் வாகைத் திணைக்கு உரியது. போரில் வெற்றி பெற்ற அரசனைப் புகழ்ந்து பாடுதல் வாகைத் திணை எனப்படும். வெற்றி பெற்றவர்கள் வாகைப் பூவைச் சூடி வெற்றியைக் கொண்டாடுவார்கள்.
மூதின்முல்லை என்பது புறத்திணைக்குரிய ஒரு துறையாகும். மூதின் முல்லை புறத்திணையில் ஒன்றான வாகைத்திணையில் இடம்பெறும் துறையாகும். மூதில் என்றால் மூத்தகுடி என்று பொருள். அதாவது . மூத்த முல்லைக் குடி.
துறை: மூதின் முல்லை. மூதில் + முல்லை என்று பிரிக்கலாம். முது என்றால் தொன்மையான என்று பொருள். இல் என்றால் குடி என்று பொருள். மூதின் என்றால் தொன்மையான் குடி என்று பொருள். மூதின் முல்லை என்றால் “மறக்குடியில் பிறந்த ஆடவர்க்கேயன்றி அம்மறக்குடியிற் பிறந்த மகளிர்க்கும் மரம் உண்டாதலை சிறப்பித்துக் கூறும் புறத்திணை என்று சென்னைப் பேரகராதி குறிப்பிடுகிறது..
மலர்களுள் சிறந்தவை குரவம், தளவு, குருந்து, முல்லை ஆகிய நான்கு மலர்கள் தான் என்றும், உணவுப் பொருட்களுள் சிறந்தன வரகு, தினை, கொள், அவரை ஆகிய நான்கு மட்டும் தான் என்றும், மூத்த முல்லைக் குடிகளுள் சிறந்த குடிகள் துடியன், பாணன், பறையன், கடம்பன் என்ற நான்கு குடிகளே என்றும், இறந்த வீரர்களின் நடுகல்லைத் தவிர, வழிபடுவதற்கேற்ற கடவுள் வேறு எதுவும் இல்லை என்றும் தன் கருத்தை இப்பாடலில் புலவர் மாங்குடி கிழார் பதிவு செய்துள்ளார்.
“திணை என்பதற்கு இடம், வீடு, குலம், ஒழுக்கம், பிரிவு என்று பல்வேறு பொருள்கள் உண்டு.” சங்க இலக்கியத்தில் திணை என்ற சொல் ஒழுக்கம் பிரிவு என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது. வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை ஆகிய ஏழும் புறத்திணைகள் ஆகும். துறை என்பது திணையின் உட்பிரிவுகளாகும்.
திணை: வாகை. வாகைப் பூவைத் (Binomial Name: Albizia lebbeck) தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல். வாகை மொத்தம் ஏழு வகைப்படும். வாகைத் திணையில் 32 துறைகள் உள்ளதாகப் புறப்பொருள் வெண்பாமாலை கூறுகிறது. அரச வாகை, முரச வாகை, மறக்கள வழி, களவேள்வி, முன்தேர்க்குரவை, பின்தேர்க்குரவை, பார்ப்பன வாகை, வாணிக வாகை, வேளாண் வாகை, பொருந வாகை, அறிவன் வாகை, தாபதவாகை, கூதிர்ப்பாசறை, வாடைப்பாசறை, அரசமுல்லை, பார்ப்பனமுல்லை, அவையமுல்லை, கணிவன்முல்லை, மூதின் முல்லை, ஏறாண்முல்லை, வல்லாண் முல்லை, காவன் முல்லை, பேராண்முல்லை, மறமுல்லை, குடை முல்லை, கண்படைநிலை, அவிப்பலி, சால்புமுல்லை, கிணைநிலை, பொருளொடு புகறல், அருளொடு நீங்கல் – ஆகிய 32 துறைகள் ‘வாகைத் திணையில்’ உள்ளன.
No comments:
Post a Comment