அரசு நிலம் சட்டவிரோதமாக விற்பனை; மதுரை சி.எஸ்.ஐ.,க்கு எதிராக வழக்கு
மதுரை : மதுரையில் அரசின் ஒப்படை நிலத்தை சி.எஸ்.ஐ.டி.ஏ., மற்றும் சி.எஸ்.ஐ.,மதுரை-ராமநாதபுரம் திருமண்டல நிர்வாகிகள் சிலர் சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக தாக்கலான வழக்கில் தமிழக அரசு பரிசீலித்து, விசாரித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த கிறிஸ்தவ சீர்திருத்த இயக்க தலைவர் தேவசகாயம் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை தல்லாகுளத்தில் 31.10 ஏக்கர் நிலத்தை 1912 ல் அமெரிக்க மிஷனரியின் 'அமெரிக்கன் போர்டு ஆப் கமிஷனர்ஸ் பார் பாரின் மிஷன்ஸ்' (ஏ.பி.சி.எப்.எம்.,) வசம் அரசு ஒப்படை செய்தது. இதற்கு நிர்ணயிக்கப்பட்ட சந்தை மதிப்பு தொகையை செலுத்த வேண்டும். நிலத்தை தொழில், தொண்டு நோக்கங்களுக்காக பயன்படுத்த வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. இதை மீறினால் நிலத்தை அரசு கையகப்படுத்தலாம்.
ஏ.பி.சி.எப்.எம்., பெயரானது 'யுனைடெட் சர்ச் போர்டு' என மாற்றம் செய்யப்பட்டது. நிலத்தில் பயிரிடுவதன் மூலம் கிடைக்கும் வருவாயை அனாதை மற்றும் ஆதரவற்றோருக்கான தொழில் பயிற்சி நிலையத்திற்கு பயன்படுத்தியது. 'யுனைடெட் சர்ச் போர்டு'வின் சில சொத்துக்கள் 'சர்ச் ஆப் சவுத் இந்தியா டிரஸ்ட் அசோசியேஷ'னுக்கு (சி.எஸ்.ஐ.டி.ஏ.,) சட்ட விரோதமாக 1973 ல் மாற்றப்பட்டன.
சி.எஸ்.ஐ.டி.ஏ., அரசின் நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியது. அச்சொத்துக்களை அரசு மீண்டும் கையகப்படுத்த தவறிவிட்டது. சி.எஸ்.ஐ.டி.ஏ.,வின் இயக்குனர்கள் சதி செய்து சி.எஸ்.ஐ., மதுரை- ராமநாதபுரம் திருமண்டல நிர்வாகிகள் சிலருடன் கூட்டுச் சேர்ந்து அரசுக்கு சொந்தமான ஒப்படை நிலத்தை சட்டவிரோதமாக, மோசடியாக மூன்றாம் நபர்களுக்கு பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்.
31.10 ஏக்கர் நிலத்தை மீட்கக் கோரி வருவாய்த்துறை செயலர், நில நிர்வாக கமிஷனர், மதுரை கலெக்டருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு தேவசகாயம் மனு செய்தார்.
நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வு: மனுதாரரின் குற்றச்சாட்டு தீவிரமானது. தமிழக அரசு தரப்பில் மனுவை பரிசீலித்து விசாரிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு விளக்கமளிக்க வாய்ப்பளிக்க வேண்டும். சட்டத்திற்குட்பட்டு தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.
தமிழர் 1000 கோடி மதுரை சொத்தை மோசடியாக விற்ற சிஎஸ்ஐ சர்ச் சிபிஐ விசாரணைக்கு தடை
No comments:
Post a Comment