Monday, December 26, 2022

தவ்வை

 https://aroundarunai.blogspot.com/2019/10/blog-post_7.html

ஜேஷ்டா தேவி (சேட்டை, மூதேவி)

பெயர் 


ஜேஷ்டா என்றால் வடமொழியில் மூத்த என்று பொருள். (ஜேஷ்ட புத்திரன் = மூத்த  மகன்). ஜேஷ்டா தேவி = மூத்த தேவி. சுருக்கமாக 'மூதேவி' - 'மூ'  என்ற முன்னொட்டு மூத்த என்ற பொருள் படுகிறது (மூதாதையர்). ஜேஷ்டையின் தமிழ் வடிவம் 'சேட்டை'.
 


சூடாமணி  நிகண்டு ஜேஷ்டைக்கு 13 பெயர்களைக் குறிப்பிடுகிறது.
  1. மூதேவி-மூத்த தேவி 
  2. தெளவை-மூத்தவள்
  3. முகடி 
  4. சீர்கேடி-சீர்களைக் கெடுப்பவள் 
  5. சிறப்பில்லாதாள் 
  6. கேட்டை-கேட்டிற்குரியவள் 
  7. கெடலணங்கு 
  8. சேட்டை-மூத்தவள்
  9. ஏகவேணி-ஒற்றைச் சடையான கூந்தலை உடையவள்
  10. கலதி-கீழானவள் 
  11. இந்திரைக்கு மூத்தாள்-திருமகளுக்கு மூத்தவள்
  12. காகத்துவசம் உற்றாள்-காக்கைக் கொடியுடையாள்
  13. கழுதை வாகினி  
இப்பெயர்களில் சங்க இலக்கியச் சொற்கள் எவையும் இல்லை. 1 - 7 பிற தமிழ்ச்சொற்கள். 8 - 10 வடசொற்கள், 11 - 13 மணிப்பிரவாளச் சொற்கள். 
கூடுதலாக கயாதரம் 'கரக்கொடிமங்கை' என்ற பெயரை குறிப்பிடுகிறது.
தமிழிணையக் கல்விக் கழகத்தின் தமிழ் மின் நிகண்டு சேட்டைக்கு முகடி, தெளவை, கலதி, மூதேவி, காக்கைக் கொடியாள், கழுதை வாகினி,  மூத்தவள், கேட்டை ஆகிய பெயர்களை குறிக்கிறது.

புராணம் 


கலைக்களஞ்சியம் கீழ்கண்ட புராணத் தகவல்களை அளிக்கிறது.
 அபிதான சிந்தாமணி கூறுவது:
 
வெட்டம் மாணியின் புராணிக் என்சைக்ளோபீடியா கூறுவது:
Puranic Encyclopedia: A comprehensive dictionary with special reference to the epic and puranic literature; Mani, Vettan; Motilal Banarasidas, Delhi; 1975



தேவப் பெயர் செய்யுள்- 44. 

முகடி (மூதேவி)

சேட்டை,இந் திரைக்கு மூத்தாள் 
    சீர்கேடி, சிறப்பில் லாதாள், 
நீட்டிய வேக வேணி, 
     நெடுங்காகத் துவச முற்றாள், 
கேட்டையே கெடல ணங்கு,
     கழுதைவா கனி,கே டெல்லாம் 
மூட்டிய கலதி, தெளவை, 
    முகடி,மூ தேவி, யாமே. 

பொருள் விளக்கம்: 
பெயர்ப் பொருள் விளக்கம்: மேலே 'பெயர்' என்ற தலைப்பின் கீழ் காண்க 
நீட்டிய-தொங்கவிடப்பெற்ற 
நெடும்-உயர்ந்த 
கேடுஎல்லாம்மூட்டிய-கெடுதிகளையெல்லாம் உண்டாக்கிய 

சேந்தன் திவாகரம் (நிகண்டு)
தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளீயீடு; முதற் பதிப்பு; 1958.

எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படும் தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருவரங்கத்து பெருமாள் இருக்க "சேட்டைதன் மடியகத்துச் செல்வம் பார்த்து இருக்கின்றீரே" என்று கடிந்து கொள்கிறார். இதனால் சேட்டை செல்வம் பெற வழிபடப்பட்டதை அறியலாம்.


இலக்கியம் 

திருவள்ளுவர் இரு குறள்களில் ஜேஷ்டையை குறிப்பிடுகிறார்.

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்                       (குறள் 167)

'செய்யவள் தவ்வையை' என்ற தொடருக்கு 'திருமகள் தன் தவ்வையாகிய மூதேவிக்கு' என்று மணக்குடவர், பரிப்பெருமாள் ஆகியோரும், 'லக்ஷ்மி  தனக்கு மூத்த சேஷ்டா தேவிக்கு (சேஷ்டா தேவி = மூதேவி)' என்று பரிதியும், 'தனக்கு மூத்த சேட்டா தேவிக்கு' என்று காலிங்கரும், திருமகள் தன் தவ்வைக்கு என்று பரிமேலழகரும் உரை எழுதியுள்ளனர். இதன் மூலம் தவ்வை என்னும் சொல் அக்கா என்ற பொருளில் திருமகளுக்கு மூத்தவள் என்று பொருள்படும் என்பதும், சேஷ்டா தேவி, சேட்டா தேவி, மூதேவி என்பன தவ்வையின் மற்ற பெயர்கள் என்பதும், தவ்வை  திருமகளுக்கு எதிர்மறையான அமங்கலங்களின் தெய்வம் என்பதும் விளங்குகிறது.

மடிஉளாள் மாமுகடி என்ப மடியிலான் 
தாள்உளாள் தாமரையி னாள்       (குறள்  617)

மாமுகடி என்ற சொல்லுக்கு 'மூதேவி' (மணக்குடவர், பரிப்பெருமாள், காலிங்கர்), 'சேட்டை' (பரிதி), 'கரிய சேட்டை' (பரிமேலழகர்) எனப் பொருள் கூறியுள்ளனர் பழம் உரையாசிரியர்கள். இக்குறளிலும் சேட்டை திருமகளுக்கு எதிர்மறை தெய்வமாக நிற்கிறாள்.

வேதாளம் சேருமே வெள் எருக்குப் பூக்குமே 
பாதாள மூலி படருமே - மூதேவி 
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே 
மன்றோரம் சொன்னார் மனை           (நல்வழி 23; ஒளவையார், 12 நூற்றாண்டு)


சிற்பம் 
ஜேஷ்டா தேவியின் சிற்பம் தனித்தன்மை வாய்ந்தது.
பருமனான உடல், பெருத்த முலைகள், தொப்பை என நளினம் குறைந்த தோற்றம். 
இரு கால்களையும் அகற்றி தரையில் ஊன்றி சாதாரணமாக அமர்ந்திருப்பது. 
இரு கைகள்தான். வலது கை கருங்குவளை (கருப்பு அல்லி) மலர் ஏந்தும் அல்லது காக்கும் முத்திரை காட்டும். இடது கை தொடைமீது இருக்கும்.
பின்னால் காக்கைக் கொடி. காக்கைக்கொடியாள் என்பது அவள் பெயர்களுள் ஒன்று. காக்கைக் கொடி தேவியின் இடப்புறமோ அல்லது வலப்புறமோ அமையும்
வலது புறம் தண்டம் ஏந்தியவாறு காளை முகம் கொண்ட மாந்தன் எனும் குளிகன். இடது புறம் தாமரை ஏந்திய அழகிய உருவம் கொண்ட பெண் மாந்தி. இவர்கள மூதேவியின் மகன், மகள் எனக் கருதப்படுகிறது. இருவரும் தேவியுடன் அதே பீடத்தில் அமர்ந்த நிலையிலோ அல்லது பீடத்தின் மீது நின்ற நிலையிலோ காணப்படுவர். 
அவள் வாகனமான கழுதையும், இடக்கைக்கு கீழே ஒரு பணிப்பெண்ணும் காணப்படுவதுண்டு
காக்கையும் துடைப்பமும் கழிவுகளை அகற்றுவதற்கான குறியீடுகள். வேட்டை சமூகத்தில் இருந்து வேளாண் சமூகமான மனிதக் குழு ஓரிடத்தில் நிலையாய் தங்கிய பிறகு அவர்களின் மிகப்பெரிய சவால் கழிவுகளை அகற்றுவது. அது உருவகப்படுத்தப்பட்டுள்ளது. (நன்றி: பாபு மனோ)

கீழேயுள்ளது சென்னை அருங்காட்சியகத்தில் உள்ள 13 நூற்றாண்டு மயிலாப்பூர் ஜேஷ்டாதேவி  சிற்பம் 


ஜேஷ்டா தேவி 


வழிபாடு
தமிழகத்தில் பல்லவர் காலத்தில்  ஜேஷ்டா தேவி வழிபாடு சிறப்பு பெற்றிருந்தது.  ராஜசிம்மனின் காஞ்சி கைலாசனாதர் கோயிலில் மூன்று இடங்களில் தவ்வையின் சிலை உள்ளது. 

சோழர் காலத்திலும் தவ்வை வழிபாடு தொடர்ந்தது. பார்த்திபேந்திரவர்மன் (10 ஆம் நூற்றாண்டு) எனும் சோழர்கால தொண்டை மண்டல சிற்றரசனின் மூன்றாம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் அமைந்த உத்திரமேரூர்க் கல்வெட்டின் மூலம் ஜேஷ்டா தேவிக்கு தனிக்கோயிலும் வழிபாடும் இருந்தது தெரிகிறது. "உத்திரமேரூரின் ஒரு பகுதியாகிய குமண்பாடி என்னுமிடத்தில் ஜேஷ்டை திருக்கோயில் இருந்தது. இவருக்கு வழிபாடாற்ற 1148 குழிநிலம் தரப்பெற்றிருந்தது."
(திருக்கோயில் - திங்களிதழ், ஜூன், 1980;   http://www.tamilvu.org/courses/degree/d051/d0511/html/d0511555.htm#q1)

சிவன் கோயில்களில் தவ்வை ஒரு பரிவாரத் தெய்வமாக வழிபடப்பட்டாள். வடமேற்கு மூலை அவளுக்குறியதாக இருந்தது. தங்கை திருமகள் வைணவத்திற்கும் தமக்கை சேட்டை சைவத்திற்கும் உரிய தெய்வங்களாக ஆயினர். (மேலே தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாடல் காண்க). 

திருமாலின் துணைவியாகிய தங்கையின்  வழிபாடு நிலைத்துவிட, தவ்வையின் வழிபாடு 13 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு மங்கியது. தவ்வைக்குரிய வடமேற்கை கஜலட்சுமி பிடித்தாள்.

வழிபாட்டில் உள்ள தவ்வையை கோயிலில் இருந்து வெளியேற்றுவதை கதைகளனாகக் கொண்டு தவ்வையின் இடத்தை ஆய்கிறது ஜெயமோகனின் 'மூத்தோள்' என்னும் சிறுகதை.

பல ஜேஷ்டை சிற்பங்கள் விளைநிலங்களில் காணப்படுகின்றன. இதனால் அவள் வளப்பத்தின் குறியீடாகவோ, உரத்தின் குறியீடாகவோ இருக்கலாம் என்ற கருத்து உள்ளது. 

திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் ஜேஷ்டையை பயணத்தில் விபத்துகள் ஏற்படாமல் இருக்க வழிபடுகின்றனர். சோம்பலை நீக்கி சுறுசுறுப்பைத் தரும் தெய்வமாகவும் கருதப்படுகிறாள்.

மறுபுறம் ஜேஷ்டை அமங்கலங்களின் குறியீடாகக் கருதப்படுகிறாள்.  அழுக்கு, நாற்றம், துன்பம்,புலம்பல், அடிக்கடி கொட்டாவி விடுதல், தலைவிரித்து போடுதல், எப்போதும் அழுக்கு ஆடைகளை அணிதல், அலங்கோலமாக இருத்தல், எதிர்மறையான எண்ணங்கள், தீராத மனக்கஷ்டம் போன்றவை அவளது இருப்பை உணர்த்துவன. 

இருளும் ஒளியும், இரவும் பகலும் போன்று அமைந்த எதிர்மறைகளின் தொகுப்பாக வாழ்வையும் பிரபஞ்சத்தையும் உருவகிக்கும் ஞானத்தில் தோன்றிய ஒரு குறியீடுதான் ஜேஷ்டா தேவி. திருமகள் மங்கலங்களின் குறியீடு. ஜேஷ்டை அமங்கலங்களின் குறியீடு.

இடங்கள் 
ஜேஷ்டா தேவியின் சிலைகளைப் பல்லவர், சோழர் கால கோயில்களில்  காணலாம். பல சிலைகள் வயல்வெளிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கோயில்களில் 
1. அரகண்டநல்லூர் (விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூர் அருகில்)


அரகண்டநல்லூர் ஒப்பிலாமணீசுவரர் கோயில்
உள் திருச்சுற்றில் வடமேற்கு மூலையில் கிழக்கு பார்த்தவாறு  
ஜேஷ்டா தேவி

2. ஜம்பை (விழுப்புரம் மாவட்டம் மணலூர்பேட்டை அருகே)


ஜம்பை ஜம்புநாதேசுவரர் கோயில் திருச்சுற்றில் வடமேற்கில்உள்ள ஜேஷ்டா தேவி சிலை
(நன்றி: திரு இளமுருகன்;
 https://tamilnadu-favtourism.blogspot.com/2016/01/jambunatheshwarar-temple-jambai.html)

3. திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் திருக்காரேசுவரர் கோயில்

4. நாகை மாவட்டம் வழுவூர் வீரட்டேசுவரர் கோயில்

5. திருச்சி உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் கோயில்

6. திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேசுவரி கோயில்

7. திருச்சி மாவட்டம் ஸ்ரீ ராமசமுத்திரம் வாலீசுவரர் கோயில் வெளியே நவக்கிரகம் அருகில்

8. திருவாரூர் மாவட்டம் திருக்கொண்டீசுவரம் பசுபதீசுவரர் கோயில் (நன்னிலம் அருகில்)

9. காஞ்சி கைலாசநாதர் கோயில்

10. காஞ்சிபுரம் மாவட்டம் வெடால் ஆண்டவர் கோயில் தென்புறம்

11. கும்பகோணம் கும்பேசுவரர் கோயில் மங்களாம்பிகை சந்நிதிக்கு வடமேற்கில்

12. கடலூர் மாவட்டம் ஒரையூர் சிவன் கோயில்

13. கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பவநாதர் கோயில் திருச்சுற்று

14. கரூர் மாவட்டம் திருமுக்கூடல் அகத்தீசுவரர் கோயில் திருச்சுற்று

15. சேலம் சுகவனேசுவரர் கோயில் திருச்சுற்று தென்மேற்கு மூலை மகாலட்சுமி சந்நிதிக்கு அருகே தனிக்கல்

16. நாமக்கல் மாவட்டம் மோகனூர் அசலதீபேசுவரர் கோயில் சுற்றுச்சுவரில் பதிக்கப்பட்டுள்ளது.

17. திருப்பரங்குன்றத்தில் தவ்வைக்குக் குடைவரைக் கோயில் ஒன்று உள்ளது.

18. விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், செவலபுரை கிராமத்தில் உள்ள அகத்தீசுவரர் கோவில் 


வயல்வெளிகளில்

ஜம்பை (விழுப்புரம் மாவட்டம் மணலூர்பேட்டை அருகே)

வயல்களுக்கிடையில் ஒரு 10 ஆம்  நூற்றாண்டு ஜேஷ்டா தேவி சிலையும் அதன் பக்கத்தில் ஒரு சிறு பாறையில் ராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணனின் கல்வெட்டும் உள்ளன.


ஜம்பை ஜேஷ்டா தேவி

சிலையின் கீழ்ப்பகுதி மண்ணில் புதைந்துள்ளது. ஜேஷ்டா தேவியின் வலமாக காளை முக மாந்தனும், இடமாக மாந்தியும் உள்ளனர். பின்னால் காக்கைக் கொடி. ஜேஷ்டா தேவி மரபுக்கு மாறாக கொடி இடையாளாக உள்ளாள்.

கேள்விகள்

ஜேஷ்டை 'நீளா தேவி, அலட்சுமி'  என்ற பெயர்களாலும் அழைக்கப் படுகிறாள் என்பது சரியா?

 ஜேஷ்டை ஏழு கன்னியருள் ஒருத்தியாக இருந்திருக்கிறாளா?

ஜேஷ்டா தேவியை ஏகாலி எனப்படும் வண்ணார்கள் ஏகவேணி என்ற பெயரில் வணங்குகிறார்கள் என்பது உண்மையா?

மேலும் அறிய

தமிழகத்தின் பல ஊர்களில் காணப்படும் ஜேஷ்டா தேவியின் சிற்பங்களின் படங்கள், தகவல்களைக் காண:
தமிழிணையம் - தகவலாற்றுப்படை

சேட்டையைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள ஜெயமோகனின் இந்த இடுகையைப் படிக்கலாம்: சேட்டை.

நன்றிக்கடன் 

தமிழ் விக்கிபீடியா - தவ்வை

சூடாமணி நிகண்டு; 
சரசுவதி மகால் வெளியீட்டு எண் : 398; முதல் பதிப்பு; 1999
http://www.tamilvu.org/library/nationalized/pdf/05-kovaiilancheran/soodamaninikhandu.pdf





கள்ளக்குறிச்சிக்கு அருகில் உள்ள சோமண்டார்குடி கிராமத்தில் சோமீசுரமுடையர் கோயில் வளாகத்தில் உள்ள இரு தவ்வை சிலைகள்:
https://www.facebook.com/notes/arunkumar-pankaj/வளம்-பெருக்கும்-சோமண்டார்குடி-தவ்வை
சோமாண்டார்குடி பல்லவர் கால தவ்வை (8 ஆம் நூற்றாண்டு)
திருக்கழுக்குன்றம் தவ்வை

தவ்வையின் வலப்புறம் மாந்தன், துடைப்பம்? இடப்புறம் காக்கை, மாந்தி. மாந்தியின் இடப்புறமும், தவ்வையின் இடது கையின் கீழும் இரு நாகங்கள். தவ்வையின் வலது காலுக்கு அருகே கழுதை வாகனம்.


ஜியேஷ்டா பற்றிய பதிவு Shri Krishan Jugnu
அதைப்பற்றிய எனது கருத்து :-
சிவாலயத்தில் பரிவார தேவியாக அஷ்ரசக்திகளில் ஒருவரான இவள் சேர்க்கப்பட்டு வடகிழக்கு மூலையில் இடம் வழங்கப்பட்டிருக்கிறாள். தன்னைத் தானே திருமணம் செய்துகொள்ளும் சனிதேவ் உடன் தமிழ் நாட்டுப் பழம்பெரும் இவளை இணைத்துக்கொண்டனர் அதனால் மந்தனும் மந்தியும் பிறந்தனர்.

சேட்டை தேவி சன்னதி
Ravichandran Kp நேற்று நீங்கள் கேட்ட புகைப்படம் மற்றும் தகவல்கள்..
Courtesy: மதுரை மாவட்ட குடைவரைகள் - மு.நளினி இரா.கலைக்கோவன்.











No comments:

Post a Comment

Supreme Court Restrains HC-Appointed Administrators From Taking Decisions For Elections Or Administration Of Church Of South India

  CSI Dispute: Supreme Court Restrains HC-Appointed Administrators From Taking Decisions For Elections Or Administration Of Church Of South ...